அறிவியல் புனைவு

2010முதல் இப்போது வரை அறிபுனை வகைமையில் எழுதிய முழுநீள நாவல்கள், சிறுகதைகள், பதிவுகள் மற்றும் மொழிபெயர்ப்புக்கதைகள்.

ஒரு கதைசொல்லியின் கதை…

பள்ளி விடுதியில் வேர்க்கடலை சுற்றி வந்த காகிதங்களில் அச்சாகியிருந்த எழுத்துகள் வழியே தான் முதன்முதலாக வாசிப்பைக் கண்டடைந்தேன். கிடைத்த சொற்ப வாய்ப்புகளில் அகப்பட்ட புத்தகங்கள் வழியே என் கதையுலகம் வளர்ந்தது. இயல்பாய் உள்ளிருந்த கதைசொல்லியின் பாதையும் தெளிவடையத் தொடங்கியது. 

மேரி ஷெல்லியின் காலம் தொட்டு அறிவியல் புனைவென்பது உலக வாசகர்களின் உள்ளங்களில் தனித்துவமான இடத்தைப்பெற்ற எழுத்து வகைமை. மேற்கைப் பொறுத்தவரை ஆர்தர் சி. க்ளார்க், ஜூல்ஸ் வெர்ன், ஐசக் அசிமோவ், ஊர்சுலா ல க்வின், ரே ப்ராட்ப்ரி, மார்க்ரெட் அட்வுட், லியூ சிக்சின் என்று காலத்துக்கேற்ப பற்பல எழுத்தாளர்கள் தோன்றி அந்த வகைமையை உயிர்ப்போடு வைத்திருக்கும் பணியைச் செய்து வருகின்றனர். இருப்பினும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே உருவாகி சுழன்றடித்த அறிபுனை எனும் அந்தச் சூறாவளி கிழக்கே வந்தடைய வெகுகாலமானது. அப்படியே வந்தபோதும் பேரளவில் அது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அறிவியல் புனைவைப் பொறுத்தவரை அந்த ஒரு வகைமைக்குள் நூற்றுக்கணக்கான உப வகைமைகள் உண்டு. இலக்கியத்திலேயே வளர்ந்துகொண்டே இருக்கும் வகைமை என்று இதை எளிதாகச்சொல்லிவிடலாம். 18ஆம் நூற்றாண்டில் ஒரு தனி வகைமையாக இது உருவானபோதிலிருந்து இன்று வரை அறிவியலின் வளர்ச்சியே இதற்குக் காரணம். அடிப்படையில் இலக்கியத்தன்மை கருதி இதை மென் அறிபுனை (soft scifi) வன் அறிபுனை(Hard scifi) என்று இரண்டாகப் பிரிந்தாலும் கதைக்களத்தையும் கருதுகோளையும் முன்வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட உபபிரிவுகளைக் கொண்டுள்ளது.

தமிழைப்பொறுத்தவரை 1925இல் விசாலாட்சி அம்மாள் எழுதிய தூரத்துப்பச்சை சிறுகதையே தமிழில் அறிபுனை நோக்கிய முதல் முயற்சி என்று சுனில் கிருஷ்ணன் சொல்கிறார். அதன்பிறகும் எண்ணற்ற இலக்கிய எழுத்தாளர்கள் இந்த வகைமையை முயன்று பார்த்திருக்கின்றனர். என்னைப்பொறுத்தவரை 1963இல் எம்ஜிஆர் நடித்து வெளிவந்த கலைஅரசி தான் வெகுஜனத்தை நேரடியாகச் சென்றடைந்த முதல் அறிவியல் புனைவு முயற்சி என்பேன். பின்னாளில் சுஜாதா என்ற ஒற்றை மனிதன் அந்த வகைமைக்கு புத்துயிர் கொடுத்து வெகுஜன தமிழ் வாசகர்களுக்கு ஒரு புதிய பரப்பை வெளிக்காட்டினார். இன்று வரை இலக்கியம் மற்றும் வெகுஜன படைப்புகளைத்தரும் பல்வேறு எழுத்தாளர்களும் இந்த வகைமையைத் தொட்டுப்பார்த்துவிட்டுச் செல்வதாக இருக்கிறது.

எனக்குத் தனிப்பட்ட வகையில் 1951இல் வெளிவந்து 90களில் பள்ளியில் ஆங்கிலக் கதைப்புத்தகத்தில் (non detailed english supplementary)  வந்த ‘the fun they had’ சிறுகதை தான் எனக்கு இந்த உலகை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு சுஜாதாவின் என் இனிய இயந்திரா ஒரு பெரிய பாதிப்பை என்னுள் ஏற்படுத்தியது எனலாம். 

பின்னர் விடுதியின் குறுகிய ஜன்னல்களின் வழியே கிடைத்த அவரது அறிபுனைக் கதைகளையெல்லாம் வாசித்து முடிக்கும்போது இருபதுகளை எட்டிக்கொண்டிருந்தேன். சுஜாதா தவிர்த்து ராஜேஷ்குமாரும் வேறு சிலரும் கூட அந்த வகைமையில் எழுதினார். 

தேடித்தேடி வாசித்தேன். பெண்கள் எழுதியதாய் எனக்குக் கிடைத்ததெல்லாம் அழுமுஞ்சிப்பெண்களால் நிரம்பிய காதல் கதைகள். எனக்குப் பிடித்த மாதிரியான சாகசக்கதை உலகங்களையெல்லாம் ஆண்களின் கண்கள் வழியே மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பது பெரும் சலிப்பை ஏற்படுத்தியது. அப்போது இரு முடிவுகள் என் மனதில் அழுத்தமாய் விழுந்தன.

எழுத வேண்டும். அறிவியல் புனைவு எழுத வேண்டும்.

இதோ எழுதிக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுதி நீண்டதொரு எழுத்துப் பயணத்தைக் காட்ட காலம் எனக்கு உதவவில்லை எனினும் கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் எழுதினேன் எழுதுகிறேன். வாசிப்பதை விடவும் அதிகமாக எழுதுகிறேன்.

தமிழில் அறிபுனை எழுத்தாளர்கள் அதிமாக இல்லை.

தமிழில் பெண் அறிபுனை எழுத்தாளர்கள் இல்லை 

தமிழில் அறிபுனை நாவல்கள் வாசிக்க ஆட்கள் இல்லை

இப்படியான அலர்களை எல்லாம் தாண்டி எழுதிக்கொண்டிருக்கிறேன். 

அவ்வலர்கள் உண்மையாகி யாருமே வாசிக்காவிட்டாலும் கூட உலகத்து ஆன்மாக்களின் கதைகளையெல்லாம்…சொற்களையெல்லாம் சேகரித்து வைத்துக்கொண்டிருக்கும் இந்தச் சைபர் வெளியில் என் சொற்களால் நிரம்பிய உலகங்கள் காலவரையற்றுக் கலந்துகிடக்கும் என்கிற நிம்மதி மட்டுமே போதுமெனக்கு.

அறிவியல் புனைவுப் படைப்புகள்:

  1. அன்றுவந்ததும் இதே நிலா – நாவல், 10.10.2010. (காலம் = 3, நாவல் (அன்று வந்ததும் இதே நிலா, மறுபதிப்பு), 2025, ஹெர் ஸ்டோரீஸ்)
  2. The children – 2011, Indus Ladies (original english version of Unit 109)
  3. யூனிட்109 – நாவல், 2019 (The children – tamil version) – அமேசான் பென் டு பப்ளிஷ் போட்டி, எழுத்துப் பிரசுரம்
  4. குவாண்டம் கொலைகள் – குறுநாவல், 2020, அமேசான் கிண்டில்
  5. ஈறிலி – 2020, போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை, அரூ
  6. அழிபசி – 2020,  சிறுகதை, அரூ
  7. தூமை – 2021, சிறுகதை, அரூ
  8. மஞ்சள் சுவர்த்தாள் – மொழிபெயர்ப்புச் சிறுகதை, 2021, கனலி
  9. சூரிய ஒளியில் டெய்ஸி – அமெரிக்க மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் தொகுப்பு, 2022, கனலி.
  10. டைனோசர் – பரிசு பெற்றச் சிறுகதை, 2023, அரூ
  11. ஹிதேரா – நாவல், 2024, ஹெர் ஸ்டோரிஸ் 
  12. காலம் = -1, நாவல் (அன்று வந்ததும் இதே நிலா 2), 2025, ஹெர் ஸ்டோரீஸ்