அங்கே நான் இல்லை

யாழும் குழலும் பண்ணும்
இசைகூட்டாத பாடலொன்று
தாளலயமோ நயமோ தேவையற்ற பாடல்
உரத்து ஒலிக்கிறது...
ஒலித்துக்கொண்டே இருக்கிறது

எனக்கேயான ஒற்றைப்பாடல் அது
யாருக்கும் கேட்பதில்லை என்னைத்தவிர
துயிலோ விழிப்போ ஊடறுக்க முடியாத
மிக நீண்ட பாடல்

எத்தனைக்கூச்சல் நிறைந்த இடத்திலும்
இந்தப்பாடல் தெளிவாய் 
ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது
பிற ஒலிக்கோர்வைகளின் மேலேறி
உரத்து இசைக்கும் பாடல் அது

சில சமயம் ஓலமாயும்
சில போது இனிமைபொதிந்தும்
சமயங்களில் வேகம் நிறைந்தும்
அல்லது வெகு மெல்லிய முணுமுணுப்பாயும்
அது ஆழ்ந்து ஒலித்துக்கொண்டேயிருக்கிறது

பாடல்வரிகளில் மொழியில்லை
மௌனத்தின் அடிபொதிந்த பொருள் 
எனக்குப்புரிந்தே இருக்கிறது
அது என்னை அழைத்துக்கொண்டே இருக்கிறது
எங்கெனத்தெரியாத ஏதோவொரு ஒளிப்புள்ளி நோக்கி 
மெல்ல எனை நகர்த்திச்செல்கிறது அது

அந்தப்பாடல்..
அது இல்லாத இடமெனில்
அங்கே 'நான்' இல்லை.

Similar Posts

  • கனவுலகு

    வானம் லட்சம் மலர்களாய் பூத்து கனத்துக்கிடக்கிறதுஇறங்கி மிதந்து என்னைப்பார்த்துச்சிரிக்கிறதுஎட்டி விரல் தொட்டு வண்ணம் குழைக்க முயல்கிறேன்அது மேகப்பந்துகளில் ஏறி ஒளிந்து கொண்டு கண்ணாம்பூச்சி காட்டுகிறதுஎனக்குக்கீழே பூமி குளித்தும் துவட்டாத பிள்ளையின் தலை போல நுனி பனித்துக்கிடக்கிறதுஅது தன் தண்ணீர் விரல்களால் என் முதுகை நெருடி முத்தமிட்டுக் கரைகிறதுஎன்னைச்சுற்றிய பெரும் வெளி அதை நிறைத்த பெருவளி எதுவும் எனக்குப்புலப்படவில்லைஎன் கண்களை வானமே நிறைத்து நிற்கிறதுசிறு விழிகளுக்குள் அத்தனை பெரிய ஆகாயத்தை அடைக்க முடியவில்லைகண்கள் மூடினால் கலைந்து விடுமோ என்ற பயத்தில்…

  • கவிதைக்கிணறு

    வறட்சியின் வெம்மை புகையஇருண்டு சுருங்கும் கிணறுநேற்றைய அலைகளின் படிமங்கள் இறுகிய பாறைகளாய் இருளுண்டு கிடக்கின்றன உயிர்ப்பின் மதர்ப்பில் முன்புஉடைந்தோடிய நீர்க்குமிழ்களின்ஒலித்திவளைகளை கனவில்சுமந்தலையும் சவக்குளிர்காற்றுபெருகித்திரண்ட புனல் புணர்ந்துஈரப்பசுமை கிளர்ந்த நினைவில்சுவர்கள் கேவும் ஒலிபலமற்ற எதிரொலியாய்மடங்கி இருளில் கரைகின்றன புனலுண்ட யாவையும்வறட்சியின் கூர்நா கத்தியால்கிழிபட்டு இறந்து கருகும் நாற்றம்மெல்ல மயானமாகின்ற கிணற்றினொரு மூலையில்மலட்டுத்தரையின் ஏதாவதொரு இணுக்கிலிருந்துஇன்றாவது ஈரம் கசியுமென்ற நம்பிக்கையோடுகாத்துக்கிடக்கிறதிந்த ஊமைத்தவளை

  • சொற்கள் நிரம்பிய வானம்

    அந்த வானில் நிறங்களுக்கு பதில் சொற்கள் காற்றில் எண்ணங்களின் வாசனை மாய நிலத்தில் கதை கதையாய் மரங்கள் கற்பனை வண்ணப்பூக்களாய் அங்கு பூத்துச்சிரிக்கும்   எப்போதும் போல அந்த உலகின் விளிம்பில் நிற்கிறேன் நான் ஒரு கதை மரத்தின் சிரித்த கிளையிலிருந்து பட்டுப்பாவாடை உடுத்திய கிளியொன்று ஊஞ்சலாடியபடி என்னைப்பெயர் சொல்லி அழைத்தது   அருகே செல்ல அடியெடுக்கிறேன் விளிம்பின் சுவர்கள் மெல்ல உடைகின்றன கறுமை பொருந்திய இயந்திரக்கரமொன்று என் கால்பற்றி இழுக்கிறது மாயங்களற்ற கற்பனைகளற்ற வானவில்லற்ற வெளிர்…

  • எது மாயை

    இரவின் பெருமோனத்தில் அங்கே நின்றேன் முடிவுகளோ கிளைகளோ அற்ற பெருவெளி நிலவும் மறந்துவிட்ட வறட்சி ததும்பிய பாலை சத்தமின்றி பாதம்தொட்ட கானல் அலைகளில் ஒரு துளி வெக்கை அள்ளிப் பருகினேன்.     உலகக்கண்ணீரின் உப்பெல்லாம் கொண்டிருந்தது அது அலையோசையில் கலந்திருந்த சிரியப்பிள்ளையின் குரல் உள்ளச்சுவற்றில் மோதி மோதி எதிரொலித்தது ஓரமாய் மக்கிக்கிடந்தன பல குண்டுதுளைத்த மீனவப்படகுகள் காற்றில் மீத்தேன் கலந்த கருகும் நெற்கதிரின் வீச்சம் முடியா இரவின் துகள்களெல்லாம் மீண்டும் மீண்டும் ஓராயிரம் அலைகள்.  …

  • மாயக்காதல்

    முன்பெல்லாம் அது என் மேசையின்ஏதாவதொரு மூலையில் அல்லதுஎன் படுக்கைக்குப்பின் ஓளிந்திருக்கும்எனக்காய்த்தோன்றுகையில் நானாக தேடியெடுப்பேன்நாங்கள் கூடும் காலங்கள் எங்களுக்கு மாத்திரமானவையாருக்கும் தெரியாத சுகமான ரகசியங்கள்எதையும் என்னிடமிருந்து எதிர்பார்க்காது அதுகையடக்கமாய் விரிந்து என்விரல் சொல்லக்கேட்டபடி தன்னைச்செதுக்கிக்கொள்ளும் கூடிக்கலவி உச்சமடைந்து வார்த்தைகளை பிரசவித்தபின்மீண்டும் அவரவர் மூலைகளில் முடங்கிவிடுவோம்அப்படியொரு அமைதியான சுமுக உறவு எங்களுக்குள்இப்போதெல்லாம் அப்படியல்லஅது முற்றிலும் மாறிவிட்டதுஅதன் வடிவம் கலைந்துவிட்டதுஅதற்கு முகம் கூட வந்துவிட்டதுஒளிவதில்லை அது நித்தமென்னைத்தேடியலைகிறதுஎங்கிருந்தாலும் வந்து என் தலைக்குள் ஏறிக்கூத்தாடுகிறதுபிடிக்காத போதுகளிலும் கூட என் கரம்பற்றி இழுக்கிறதுஎங்கள் உறவு இனி எப்போதும்…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன