எது மாயை

ரவின் பெருமோனத்தில் அங்கே நின்றேன்
முடிவுகளோ கிளைகளோ அற்ற பெருவெளி
நிலவும் மறந்துவிட்ட வறட்சி ததும்பிய பாலை
சத்தமின்றி பாதம்தொட்ட கானல் அலைகளில்
ஒரு துளி வெக்கை அள்ளிப் பருகினேன்.
 
 
உலகக்கண்ணீரின் உப்பெல்லாம் கொண்டிருந்தது அது
அலையோசையில் கலந்திருந்த சிரியப்பிள்ளையின் குரல்
உள்ளச்சுவற்றில் மோதி மோதி எதிரொலித்தது
ஓரமாய் மக்கிக்கிடந்தன பல குண்டுதுளைத்த மீனவப்படகுகள்
காற்றில் மீத்தேன் கலந்த கருகும் நெற்கதிரின் வீச்சம்
முடியா இரவின் துகள்களெல்லாம்
மீண்டும் மீண்டும் ஓராயிரம் அலைகள்.
 
 
திசைகள் தெரியவில்லை
அலைகளும் ஓயவில்லை
 
 
எப்படியோ பாலையின் வெப்பத்தை மடித்துச்சுருட்டி
ஊதிப்புகை சேர்த்து சிறு நெருப்பு செய்தேன்.
பற்றிக்கொண்டுப்பெருகிய ஒளிப்பிரவாகத்தில்
மடிந்த இரவோடு தொலைந்தது பாலை
 
 
பனியின் பிள்ளையாய் பூத்த
மலரின் புன்னகையோடு
மலர்க்கடல் மத்தியில்
வானவில் வண்ணங்களில்
விடிந்தது அழகிய காலை
ஏனோ புரியவில்லை
இரண்டில் எது மாயை

Similar Posts

  • அக்கா குருவி

    இரவின் துகிலுரித்தபடி வரும் ஒளியின் குரலாய் தினம் மௌனம் தின்றபடி காலையில் வந்து விடும் அந்தக்குயில்   இருளடர்ந்த இளங்காலையின் அரவமற்ற வெளியில் ஏதோ மரத்தில் இருந்தபடி என்னை அழைக்கும் குரல் வருவது வெளியிலிருந்தா அன்றி எனக்குள்ளிருந்தா என்ற குழப்பம் ஏனோ எப்போதும் மிஞ்சும் அதன் மொழியில் என் பெயர் அது போல அதன் அழைப்பில் என்னை மட்டுமே உணர்வேன் வெகு சில சமயங்களில் உடனிருக்கும் பிறருக்கு ஏனோ அது கேட்பதில்லை எனக்கு மட்டுமே என் செவியில்…

  • கனவுலகு

    வானம் லட்சம் மலர்களாய் பூத்து கனத்துக்கிடக்கிறதுஇறங்கி மிதந்து என்னைப்பார்த்துச்சிரிக்கிறதுஎட்டி விரல் தொட்டு வண்ணம் குழைக்க முயல்கிறேன்அது மேகப்பந்துகளில் ஏறி ஒளிந்து கொண்டு கண்ணாம்பூச்சி காட்டுகிறதுஎனக்குக்கீழே பூமி குளித்தும் துவட்டாத பிள்ளையின் தலை போல நுனி பனித்துக்கிடக்கிறதுஅது தன் தண்ணீர் விரல்களால் என் முதுகை நெருடி முத்தமிட்டுக் கரைகிறதுஎன்னைச்சுற்றிய பெரும் வெளி அதை நிறைத்த பெருவளி எதுவும் எனக்குப்புலப்படவில்லைஎன் கண்களை வானமே நிறைத்து நிற்கிறதுசிறு விழிகளுக்குள் அத்தனை பெரிய ஆகாயத்தை அடைக்க முடியவில்லைகண்கள் மூடினால் கலைந்து விடுமோ என்ற பயத்தில்…

  • கவிதைக்கிணறு

    வறட்சியின் வெம்மை புகையஇருண்டு சுருங்கும் கிணறுநேற்றைய அலைகளின் படிமங்கள் இறுகிய பாறைகளாய் இருளுண்டு கிடக்கின்றன உயிர்ப்பின் மதர்ப்பில் முன்புஉடைந்தோடிய நீர்க்குமிழ்களின்ஒலித்திவளைகளை கனவில்சுமந்தலையும் சவக்குளிர்காற்றுபெருகித்திரண்ட புனல் புணர்ந்துஈரப்பசுமை கிளர்ந்த நினைவில்சுவர்கள் கேவும் ஒலிபலமற்ற எதிரொலியாய்மடங்கி இருளில் கரைகின்றன புனலுண்ட யாவையும்வறட்சியின் கூர்நா கத்தியால்கிழிபட்டு இறந்து கருகும் நாற்றம்மெல்ல மயானமாகின்ற கிணற்றினொரு மூலையில்மலட்டுத்தரையின் ஏதாவதொரு இணுக்கிலிருந்துஇன்றாவது ஈரம் கசியுமென்ற நம்பிக்கையோடுகாத்துக்கிடக்கிறதிந்த ஊமைத்தவளை

  • துளி…

    நெடுநேரம் உள்ளங்கையில் ஏந்தியிருந்தேன்என் ஒற்றைக் கண்ணீர்த்துளிஉற்று நோக்கிக்கொண்டிருந்தேன்ஆவிப்புகை மீண்ட கண்ணாடி பிம்பம் போலஅதன் மேலே மெல்லத்தெரிகின்றனஆயிரம் கதைகளும்சில உடைந்த மெல்லிய இதயங்களும்ஒட்டுப்போட்ட உறவுகளும்காயப்பட்ட கனவுகளும்வலி தீண்டிய நினைவுகளும்நீண்ட அவதானிப்பின் பின்னிரவில்கண்ணீர்த்துளி கரைகிறதுதன் இறுதிப்பிரதிபலிப்பாய்அனுபவப்புன்னகையொன்றைபரிசளித்தபடி..

  • அங்கே நான் இல்லை

    யாழும் குழலும் பண்ணும் இசைகூட்டாத பாடலொன்று தாளலயமோ நயமோ தேவையற்ற பாடல் உரத்து ஒலிக்கிறது… ஒலித்துக்கொண்டே இருக்கிறது எனக்கேயான ஒற்றைப்பாடல் அது யாருக்கும் கேட்பதில்லை என்னைத்தவிர துயிலோ விழிப்போ ஊடறுக்க முடியாத மிக நீண்ட பாடல் எத்தனைக்கூச்சல் நிறைந்த இடத்திலும் இந்தப்பாடல் தெளிவாய் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது பிற ஒலிக்கோர்வைகளின் மேலேறி உரத்து இசைக்கும் பாடல் அது சில சமயம் ஓலமாயும் சில போது இனிமைபொதிந்தும் சமயங்களில் வேகம் நிறைந்தும் அல்லது வெகு மெல்லிய முணுமுணுப்பாயும் அது…

  • சுயம்

    ஒவ்வோரு கணமும் பெருக்கிறதுஎன்னைத்தனக்குள் அமிழ்த்துகிறதுஇருளிலும் மருட்டும் தவிர்க்கமுடியா நிழல்கடும்பசி கொண்டலையும் பேயன்ன அழல்கண்ணாடியில் உமிழ்கிறேன் எனக்குப் பதில்அங்கே அதன் பிம்பம் உரக்கச்சிரிப்பதால்நொடிதோறும் உணவுகேட்கிறதுமனம் உண்டு செறிக்கிறதுஅந்த நிழலின்றி இந்த நிஜம் இல்லைஅதைத்தொலைக்கும் வழி தெரியவில்லைகண்ணீர் வடிக்கும் என்னைப்பார்த்துகைகொட்டிச்சிரிக்கிறது என் சுயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *