பல்லவ காம்போஜம்
Pallava Kambojam is a Tamil historical fiction novel by Maya inspired by the debated links between the Pallavas, Kamboja, and the early Khmer world. Set in the sixth century, the story draws on inscriptions, maritime history, and cultural parallels between South India and Southeast Asia. The novel reimagines an era when dynasties, scripts, beliefs, and political ideas travelled across the sea.
தென்கிழக்கு ஆசியாவின் வரலாற்றில் பிரிக்கமுடியாதபடி பின்னிக்கிடப்பது நம் தமிழ் நிலத்தின் தொடர்புகள். பண்டைய காலத்தில் சுவர்ணபூமியென்று மேற்திசை மக்கள் அழைத்து மகிழ்ந்த ஒரு நிலப்பகுதியின்(கம்போடியா) வரலாற்றில் பல்லவத் தாக்கம் மிகத்தெளிவாகக் காணக் கிடைக்கிறது. கம்போடியக் கல்வெட்டு மொழி பல்லவ கிரந்தமாக இருப்பது முதல் அகத்தியர் மற்றும் காரைக்கால் அம்மையார் வழிபாடு என்று வரிசையாகச் சொல்லிக்கொண்டு போகலாம். பிற்காலத்தில் இரண்டாம் பரமேஸ்வரனுக்குப் பின் அரசன் வேண்டிக் கடல் கடந்து நந்திவர்மனை அழைத்துக்கொண்டு வந்தது வரலாறு.
இத்தகைய தொடர்பு அது எங்கணம் நிகழ்ந்திருக்கக்கூடும், அதன் துவக்கப்புள்ளி எது என்ற தேடலின் விளைவு தான் இக்கதை. காஞ்சியில் நம் விசித்திர சித்தன் மகேந்திர பல்லவன் அரசாட்சி செய்த அதே காலகட்டத்தில் காம்போஜத்திலும் அதே பெயரில் ஒரு மன்னர் ஆண்டது தற்செயல் நிகழ்வாயிருக்குமா அன்றி அதன் பின்னே அழகான ஒரு கதை இருக்கக்கூடுமா?
கதை பிறந்த கதை:
பண்டைக்காலந்தொட்டு நாவலந்தீவிலிருந்து கிழக்கும் மேற்கும் பிரயாணப்பட்ட ஆதிமனிதர்களின் சுவடுகள் பல்வேறு வகைகளில் அந்த நிலங்களின் வரலாறுகளை மாற்றியமைத்தன. அப்படி தக்கணத்திலிருந்து கிழக்கே சென்றவர்களால் கீழ்த்திசை நிலங்களில் ஏற்பட்ட மாற்றங்களே பெரும்பாலும் எனது வரலாற்றுப்புனைவுகளின் கருக்களாயிருக்கும்.
தமிழ்நிலத்துக்கும் கொரியாவுக்கும் இருந்த தொடர்பைச்சுட்டி செம்பா எழுதியபின் மீண்டும் கிழக்கே கம்போடியாவை முன்வைத்து நான் எழுதிய மூன்றாவது வரலாற்றுப்புதினம் இது.
கதை நடக்கும் ஆறாம் நூற்றாண்டளவில் தக்கணத்தில் பெரும் பேரரசாக இருந்தது பல்லவப் பேரரசு. இதே காலகட்டத்தில் கீழ்த்திசையின் பெரும்பான்மை அரசுகள் சைவம், வைணவம் அல்லது பௌத்தம் என்று நாவலந்தீவிலிருந்து வந்த மூன்று சமயங்களை ஆதாரமாக வைத்து அரசபரிபாலனம் செய்யத்துவங்கியிருந்தன. மலேய தீபகர்பத்தின் பெரும்பகுதியும் இன்றைய கம்போடியா மற்றும் லாவோஸில் பெரும்பகுதியும் சென்லா மற்றும் ஃப்யூனான் என்று இரு அரசுகளின் கீழ் இருந்தன. இவ்விரு அரசுகளுமே கவுண்டின்யன் வழி வந்தவர்களாக அதாவது பரதகண்டத்திலிருந்து வந்தவர்களாகத் தங்களை சொல்லிக்கொண்டனர். இவ்விரண்டு அரசுகளின் கிழக்கே சம்பா இருந்தது. மலேய தீபகர்பத்தின் இடைப்பகுதியில் தக்கோலம், தம்மராஜ நகரம், இலங்காசோகம், கடாரம் என்று சிறு தேசங்கள் முளைத்திருந்தன. மலேயதீபகர்பத்தின் தெற்குப்பகுதியும் சுமத்ராவும் சேர்த்து ஸ்ரீவிஜயதேசம் வளர்ந்து வந்துகொண்டிருந்தது. சாவகத்திலும் தருமநகரம் எனும் சிறு தேசம் எழுந்து வளர்ந்து கொண்டிருந்தது.
இப்படி பல்வேறு தேசங்கள் மெல்ல வளர்ந்துகொண்டிருந்த நிலையில் வணிகர்கள் மூலமாகவும் சமயக்குரவர்கள் மூலமாகவும் சமயம் மட்டுமின்று பண்பாடும் மொழியும் கூடக் கீழ்த்திசை நோக்கிச்சென்றன. ‘ஆள்பவனே’ ‘ஆண்டவனாய்’க் கருதும் எண்ணப்போக்கும் எழும்பி வளர்ந்தது. இங்கிருந்து சென்றவர்கள் அந்நிலத்துப்பெண்களை மணந்து தத்தம் சமயச்சார்பு மொழியில் நகரங்களுக்கும் இடங்களுக்கும் இறைவனுக்கும் பெயர்கள் அமைத்தனர். அமராவதி, மேகோங் (மா கங்கா, Mekong), இந்திரபுரம், வியாதபுரம் என்று தேசங்களும் மகேந்திரகிரி, லிங்கபர்வதம் என்று சமயச்சின்னங்களும் பெருவாரியாகச் சமஸ்க்ருதப்பெயர்கள் தாங்கி அமைந்தன.
இந்தக் காலகட்டத்தில் பெரும்பான்மை மக்கள் கருதுவது போல் அல்லாமல் பல்லவர்களைத்தாண்டி வேறுபல அரசுகளும் ’வர்மன்’ என்ற பின்னொட்டைத் தன் அபிடேகப்பெயரில் பயன்படுத்தினர். கீழ்த்திக்கில் சைலேந்திரர்கள், சம்பா மன்னர்கள், மலேயதீபகர்பத்திலிருந்த பல்வேறு தேசத்து மன்னர்கள் என்று பெரும்பான்மை அரச குடும்பத்தினர் ‘சத்திரியன்’ எனப்பொருள்படும் இந்த வர்மன் என்ற பின்னொட்டையே பயன்படுத்தினர். இந்தக் காலகட்டத்தில் நாவலந்தீவிலும் பல அரசுகள் இந்த வர்மன் பின்னொட்டைப் பயன்படுத்தினர்.
காம்போஜ அரசர்களும் வர்மர்களே! ஆனால் காம்போஜத்துக்கும் பல்லவ அரசுக்குமான தொடர்பு வெறும் பின்னொட்டோடு நின்று விடவில்லை. காம்போஜத்து விஷ்ணு உருவத்துக்கும் பல்லவ விஷ்ணு உருவங்களுக்கும் உள்ள ஒற்றுமையில் துவங்கி, க்மெர் கல்வெட்டுகளின் எழுத்துவடிவமாக (லிபி) பல்லவ கிரந்தம் பயன்படுத்தப்பட்டது, அகத்தியர் வழிபாடு, காரைக்கால் அம்மையார் வழிபாடு, தென்னகத்து நடராஜ வடிவம், மணிமேகலை வழிபாடு, நாகவழிபாடு, உணவு உடை பழக்கங்கள், தென்கலை வைணவ சம்பிரதாயமென்று தமிழ் நிலத்தின் குறிப்பாகப் பல்லவ காலத்துத் தொடர்பைக்காட்டும் சான்றுகளை வரிசையிட்டுக்கொண்டே போகலாம். இத்தோடு இரண்டாம் நந்திவர்மன் கிழக்கே இருந்து கடல் கடந்து அழைத்து வரப்பட்டதையும் பொருத்திப் பார்க்கவேண்டியிருக்கிறது.
இரண்டாம் நந்திவர்மனின் மூதாதையரான பீமவர்மன் எனப்பட்டவனின் பெயர் கிடைத்தாலும் அவன் இருந்ததற்கான சான்று தக்கணத்தில் எங்கும் காணக்கிடைக்கவில்லை. ஆனால் கீழ்த்திசையில் ஒரு பீமபுரம் (Bhima pura) நம் கண்ணில் படுகிறது. அந்த அரசின் அரசர் வரிசையைப்பின்பற்றினால் நந்திவர்மனின் தந்தையென்று வரலாறு சொல்லும் பெயரான இரண்யவர்மன் என்பவனும் அங்கே இருக்கிறான். போலவே ஒரே காலத்தில் மகேந்திரவர்மன் என்ற பெயரில் இரு திசைகளிலும் மன்னர்கள் இருந்து ஆட்சி புரிகின்றனர். பல்லவ குலத்தின் சிறந்த மன்னர்களுள் ஒருவன் முதலாம் மகேந்திரனென்றால், காம்போஜத்தை நிருவியர்களில் முதன்மையானவன் காம்போஜத்து மகேந்திரவர்மன். இவர்களின் காலத்துக்குப்பிறகே காம்போஜ பல்லவ தொடர்பு மிகத்தெளிவாக எழுகிறது.
இந்த மகேந்திரவர்மன் காலத்துக்குப்பிறகே கம்பு ராஜ்ஜியம் என்ற வடிவில் காம்போஜம் என்கிற பெயர் உருவாகிறது. அதுவரை சிறு குறு தேசங்களாய்க் கிடந்தவற்றை ஒன்று திரட்டித் பழைய அரசபெயரைத் துறந்து காம்போஜம் என்று அழைத்துக் கொள்ளத்தொடங்குகிறார்கள். தங்களின் வம்சக்கதையைச் சொல்வதில் உள்ள ஒற்றுமை (கம்பு சுயம்பு வழி வந்தவர்கள்) துவங்கி கம்போடிய கல்வெட்டில் ‘காஞ்சிபுர நிருபா’ என்று பாடுமளவுக்கு தன்னைப்பல்லவ குலத்தோடு தொடர்பு படுத்திக்கொள்கிறார்கள். பிற்காலத்தில் சூர்யவர்மன் கட்டப்போகும் அங்கோர்வாட்டுக்கு துவக்கமாக இருந்தது இந்தக்காலகட்டம் தான். கவுண்டின்யன் வழிவந்த மன்னன் ருத்ரவர்மன் தம்பியைக்கொன்று அரசனானது முதல் பவவர்மனும் மகேந்திரவர்மனும் சேர்ந்து காம்போஜத்தை நிருவியது வரை கல்வெட்டு சொல்லும் வரலாறு. வரலாறு காட்டும் பாதையில் எழுதப்பட்ட புனைவுநூல் இது.
buy now
நூலைப் பெற
பிற வரலாற்று நூல்கள்



