a historical travellogue

நாகர் நிலச்சுவடுகள்

கதை பிறந்த கதை:

கடாரம் எழுதியபின்னர் வரலாற்று ஆய்வின் மீது பெரும் ஈடுபாடு தோன்றியது. அதன் விளைவாக வரலாற்று ஆய்வுசார் அமைப்புகளைத் தொடர்ந்தும் இணைந்தும் பணியாற்றிக்கொண்டிருந்தேன். 2019இல் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாக இலங்கைக்குப் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஐந்து நாள் பயணத்தில் ஒரு சாமானியளின் பார்வையூடாகக் கண்டது  கண்டபடி சொல்லிச்செல்வது தான் இந்த நூல்.

பயணத்தில்  சென்ற இடங்களை மட்டுமே கணக்கில் கொண்டு அவற்றின்  வரலாற்றுத் தகவல்களை மட்டுமே நிரல் படுத்தும் வரலாற்றுப்பயணக் கட்டுரைத்தொகுப்பாகவே இது இருக்கும். கண்ட காட்சிகளையும் இடங்களையும் வரலாற்றுத் தரவுகளின் சான்றுகொண்டு மீட்டுருவாக்கம் செய்து பார்க்க முனைகிறது இக்கட்டுரைத்தொகுப்பு.

உலகின் முதல் இலக்கியமே ஒரு வகையில் ஒரு  பயணக்குறிப்பு தான் (கில்காமேஷ் தொன்மை). ஆதியில் கதை சொல்லும் வடிவம் வளர்ந்து வளம் பெற்றதில்  பயணங்களுக்கு முக்கிய பங்குண்டு.  

ஒரு காலத்தில் பயணக்குறிப்புகளின் வாயிலாகத்தான் வரலாறு  எழுதப்பட்டது, அறிந்து கொள்ளப்பட்டது. மெகஸ்தனிஸின்  இண்டிகா, ஃபா ஹியான் மற்றும் யுவான்சுவாங் குறிப்புகள்  என்று பயண எழுத்தால் நிறுவப்பட்ட வரலாறு அநேகம்.  தூதர்கள், இறையன்பர்கள் என்று துணிவும் முனைப்பும்  உள்ளவரன்றி சாமானியர் எல்லோராலும் பயணங்கள் செல்வது  முடியாத காலம் அது. தமிழைப் பொறுத்தவரை முதல் பயண  இலக்கியம் செங்கோன் தரைச்செலவு என்பார்கள். தொடர்ந்து  ஏ.கே. செட்டியார், சோமலெ போன்றோர் தமிழில் பயண  எழுத்தை இலக்கியத்துள் புகுத்திச்சென்றார்கள். இன்று இலக்கியவாதிகளால் பயண இலக்கியம் விரும்பி  எழுதப்படுகிறது. நாளிதழ், மாத இதழ் தொடர்களாகப் பயணக்கட்டுரைகள் மலினமடைந்து விட்டன. இருந்த  இடத்திலேயே உலகைச் சுற்றிப்பார்க்கும் வசதியைத் தொழில்நுட்ப வளர்ச்சி தந்து விட்ட இந்தக்காலத்தில்  பயணங்கள் அண்டை வீட்டுக்குச்சென்று வருவது போலச் சுலபமாகி விட்டது. ஆனாலும் பயண எழுத்து இன்றும்  விரும்பி வாசிக்கப்படுகிறது என்றால் அதற்குக் காரணம்  எழுத்தின் வீரியமும் மொழியும் படைப்பாளரின் பார்வை வழியாக வாசகர் கண்டடையும் அனுபவமும் தான். 

பிற வரலாற்றுப் புனைவு நூல்கள்

பல்லவ காம்போஜம்
Cover page of Pallava Kambojam novel