a tamil historic fiction

கடாரம்

கடாரம்
பதினோறாம் நூற்றாண்டு…
நாகை விகாரையில் நிகழும் ஒரு கொலை…
கடாரத்துக்கோட்டையில் இளவரசியின் கண்ணெதிரே விளையுமோர்  பாதகம்…
திடீரென்று அலைகடல் மேல் கலம் பல செலுத்தி கடாரம் வரும் சோழப்படை…
இந்நிகழ்வுகள் யாவற்றுக்கும் என்ன தொடர்பு?
 தஞ்சைப்பெருவணிகரின் செல்வனான நித்திலங்குமரனுக்கு அங்காடிக் கணக்கு அலுக்கிறது. சுவாரஸ்யம் தேடிச் சுற்றியலைபவனுக்கு விஷயமும் கிடைக்கிறது. எதிர்பாராத விதமாய் அவன் சந்திக்க நேரும் கைதி… அவன் சொன்ன செய்தி…தொடர்ந்த அந்தக் கைதியின் நிலை…இவை கண்ட நித்திலங்குமரன் தேடத் துவங்குகிறான். அவனை மாய வலையொன்று சுற்றிப் படர்கிறது, அது கடாரத்துக்கு அவனை இழுத்துச்செல்கிறது.
அங்கே அவனைத் தொடரும் மர்மங்கள். கண்களுக்குப் போதையூட்டுமளவுக்கு கருத்திலே ஐயத்தைக்கூட்டும் -வேகமும் விவேகமும் நிறைந்த கடாரத்து வணிகர் மகள்- மித்ராதேவி எந்த அளவு நம்பத்தகுந்தவள்?

துறவிக்கும், கைதிக்கும், கடாரத்துப் பெருந்தலைகளுக்கும் பரிச்சயமான நடனப்பெண் மேகலையின் ரகசியம் என்ன? தமைச்சுற்றும் மாயா வினோதங்களின் மூலத்தைக் கண்டறிய நித்திலங்குமரனும் மித்ராதேவியும் துவங்கும் விபரீத பயணத்தில் இவர்கள் சந்திக்கும் மனிதர்கள், தொடரும் அபாயம், காண நேரும் காட்சிகள் இவையாவும்  தொடர்பற்ற நிகழ்வுகளா அன்றி தொடரும் சங்கிலியின் புலனறியா முடிச்சுக்களா?
இவர்களின் தேடல் இப்படியே நின்று விடுமா?
அன்றி சோணாட்டுக்கும் – அதன் நட்புக்குரிய கீழைக்கடலின் பேரரசுகளுள் ஒன்றான- ஸ்ரீவிஜயதேசத்துக்கும் ஏற்பட்ட யுத்தம், அதன்   பின்னணியில் ஒளிந்திருக்கும் பெரும் சூழ்ச்சி வரை நீண்டு செல்லுமா?
முடிவில் கத்தி நீள்வது தம் தேசத்து மக்களின் உயிரினும் மேலான  ஒருவரின் கழுத்துக்கு நேரே என்ற நிலையில், அருகே நிற்பதுஎதிரியா, நண்பரா என்ற ஐயம் பலமாய் எழுகின்ற சமயத்தில் இவர்களால் என்ன செய்ய முடியும்?

கடாரம் – இதை எழுதத்துவங்கியதே ஒரு சுவாரஸ்யமான விபத்து என்றே சொல்ல வேண்டும். முதல் அறிபுனைப்புதினம் எழுதி முடித்து அதை வெளியிட்டபின் பணிநிமித்தம் நாடு மாற வேண்டிய சூழல். தொடர்ந்து பயணங்களில் வலைப்பக்கங்களில் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த சூழலில் முதல் வரலாற்றுப்புதினம் எழுதவேண்டுமென்ற எண்ணம் 2011இல் வந்தது. வேறொரு கதையை முடிவு செய்து ஆய்வைத்தொடங்கிய சமயம் திடீரென மலேசியாவுக்கு மாற்றலாகி வந்தோம்.

மலேசிய மண்ணில் கால் வைத்ததும் புதிய நிலத்தில் இறங்கிய எண்ணம் சிறிதும் ஏற்படவில்லை. முதல் வாகனப் பயணத்தில் வாய்த்த வாகன ஓட்டி ஏறியதும் பசியாறிவிட்டீர்களா என்று கேட்டதும் காரணமாக இருக்கலாம். இத்தனைக் காத தூரம் தாண்டியும் தமிழ் நிலத்தின் வேர்கள் இத்தனை ஆழமாக இங்கே ஊன்றியிருக்கக் காரணமென்ன என்ற கேள்வியின் தொடர்ச்சியாக ஒரு தேடலும் அந்தத் தேடலின் விளிம்பில் கடாரம் புனைவிற்கான முடிச்சும் எனக்காகக் காத்திருந்தன.

இந்த நூலின் ஆக்கத்துக்காகத் தென் கிழக்காசியா முழுவதும் பயணம் செய்யும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது. போலவே தென்கிழக்காசிய தமிழ் தொடர்புகள்குறித்த ஆய்விலும் என் மனம் பெரும் ஈடுபாடு கொண்டது.

தமிழகத்திலும் மலேசியாவிலும் கிடைத்த நூலக வாய்ப்புகளைப்பயன்படுத்தி ஏராளமான நூல்களில் இருந்தும் தரவுகள் எடுக்க முடிந்தது. மேலும் ஆய்வுக்குப் பொன்னியின் செல்வன் வரலாற்றுப்பேரவை கூகிள் க்ரூப் தளம் போன்ற பல்வேறு இணையக்குழுக்களும், சோழன் வென்ற கடாரம் என்ற நூலை எழுதிய டத்தோ வீ. நடராஜன் போன்ற மலேசிய ஆய்வாளர்கள் பலரும் எனக்குப் பேருதவியாக இருந்தனர். 2025இல் கடாரம் வெற்றிகரமாக ஐந்தாவது பதிப்பைக் காண்கிறது.

பிற வரலாற்று நூல்கள்

பல்லவ காம்போஜம்
Cover page of Pallava Kambojam novel
நாகர் நிலச்சுவடுகள்
Cover page of Nagar nila chuvadugal