Ancient sword symbolizing historic fiction

கடாரம் முதல் காம்போஜம் வரை பல ஆண்டுகளாக ஆய்வு செய்து எழுதிய வரலாற்றுப் புனைவு நூல்கள், ஆய்வுப்பதிவுகள் மற்றும் காணொளிகள்.

வரலாற்றுப் புனைவு:

பள்ளிக்காலத்தில் வரலாற்றுப் பாடவேளையில் ஆசிரியையின் நாற்காலிக்கு மிக அருகே அமர்ந்துகொண்டு (மறைவுப்பிரதேசம்) தூங்கிவழிந்தவள் தான் நான். எந்தக்காலத்திலும் எனக்குத் தேதிகளும் ஆண்டுகளும் நினைவில் தங்கியதில்லை. பெயர்களும், தகவல்களும் வாசித்த அடுத்த நொடியில் மறந்துவிடும் விஷேச மூளை என்னுடையது.

பிறகெப்படி வரலாற்றுப் புதினம் பக்கமாகக் கரையொதுங்கினேன் என்று கேட்கிறீர்களா?

எல்லாம் எனக்குள்ளிருக்கும் கதைசொல்லியின் திருவிளையாடல் தான்.

வாசிப்பு அறிமுகமான குறுகிய காலத்திலே பொன்னியின் செல்வனும் எனக்கு அறிமுகமானது. அற்புதமான திறப்பு அது.

கல்கி நம்மைக் காலப்புரவியில் ஏறச்சொல்லிக் கூட்டிச்செல்ல எத்தனிக்கும்போது உண்மையிலேயே காலப்பயணக்கதைகளை எழுதிக்கொண்டிருந்த எனக்கு மிக எளிதாக அதில் என்னை ஒப்புக்கொடுத்துவிட முடிந்தது. விண்ணிலிருந்து தரை இறங்கினால் பார்ப்பதெல்லாம் பண்டை நிலம்.

அடேங்கப்பா!.. என் கற்பனைக் குதிரைகள் க்ளோனிங் ஆகிப் பெருகி எட்டுத்திக்கும் பாய்ந்தோடத் தொடங்கின. கல்கியைத் தொடர்ந்து அகிலன், இந்திரா பார்த்தசாரதி என்று சாண்டில்யனிடம் வந்து நின்றபோது அடுத்த முனைப்பு உள்ளுக்குள் அலையாய் எழுந்தது.

வரலாற்றுப் புதினம் எழுதுவோம் என்று முடிவெடுத்தபோது ஆண்டு 2011. அப்போது பெண் வரலாற்று நாவலாசிரியர்கள் பெரிதாய் இருக்கவில்லை. ஆண்கள் கோலோச்சிய வகைமையது (இப்போது அதிகம் பெண்ணெழுத்தாளர்கள் இருக்கிறார்கள்). அந்தச்சூழலில் மலேசியா செல்ல நேர்ந்தது. கடாரத்தின் கதை என் மணக்கண்ணில் விரிந்தது.

அதன்பிறகு வெறும் புனைவுக்காக மட்டுமல்லாமல் உள்ளபடி வரலாற்றின் மீது புதியதொரு காதலே உருவாகிவிட்டது.

குறிப்பாகத் தமிழுக்கு, தமிழ் கூறும் நல்லுலகுக்கு இந்த நாவலந்தீவைத்தாண்டி இருக்கும் தொல் தொடர்புகள். இதுவே என்னுடைய ஆய்வுப்பாதையானது.

அந்த வகையில் கடாரமும், செம்பாவும், செம்பாவைத்தொடர்ந்து பல்லவ காம்போஜமும் தமிழர்களுக்கும் தென்கிழக்காசியாவுக்குமான தொடர்புகளை முன் வைத்து எழுதப்பட்ட புதினங்கள். 

இந்தப் பயணத்தின் விளைவாகத் தமிழ் மரபு அறக்கட்டளையெனும் சீரிய அமைப்பு ஒன்றின் உறுப்பினர் ஆனேன். அங்கிருந்த ஆய்வாளர்களின் வழிகாட்டுதலில் ஆய்வுகுறித்து பெரிதும் அறிந்துகொண்டேன். மலேயா பல்கலைக்கழகத்தில் தென்கிழக்காசிய வரலாறு முதுகலைப் பட்டமும் சேர்ந்தேன்.

எப்போது என் எழுத்தில் கற்பனையின் விஸ்தாரத்துக்கு மூலமாக, அடித்தளமாகப் பலமான ஆய்வுத்தரவுகளை வைப்பது என் வழி.

என்ன தான் சொல்வது கதையென்றாலும் அதன் அடிப்படையில் சற்றேனும் பொய் இருந்துவிடக்கூடாதெனும் முனைப்பு எனக்குண்டு.

வரலாற்றுப்புதினங்கள் உள்ளபடி வரலாறெனும் பேருலகுக்கு நம்ம இட்டுச்செல்லும் ஒரு கதவு என்ற எண்ணம் எப்போதும் எனக்குண்டு.

வரலாற்றுப் படைப்புகள்: