செம்பா
Chemba is a Tamil historical fiction novel written by author Maya. Inspired by the ancient legend of a Tamil princess who crossed the seas and became queen in Korea, the novel blends maritime history, cultural connections, and imaginative storytelling. Through the journey of a courageous young woman, the story explores the historical ties between the Tamil world and the Korean peninsula.
முதல் நூற்றாண்டு பொஉ.
உலக வரலாற்றில் மிக முக்கியமானதொரு காலகட்டம். அன்றைய உலகின் பல திசைகளிலும் கரையிறங்கிப் பரவத் தொடங்கியிருந்தான் தமிழன். சங்க காலமென நம் இலக்கியங்கள் சுட்டும் காலத்தின் மையப்புள்ளி.
அப்படியானதொரு காலத்தின் ஒரு துளியாய் வருகிறது நம் கதை.
செம்பாவின் கதை வரலாறல்ல. வரலாறென்பது கல்லில் பொறித்ததுபோலத் தெளிவான சான்றுடையதாக இருக்க வேண்டும். ஆனால், செம்பாவின் கதை கல்லில் வடிக்கப்பெறவில்லை. அது காற்றில் வரையப்பட்டிருக்கிறது. அது பன்னெடுங்காலமாய் மூச்சிலும் பேச்சிலும் கலாசாரப் பண்பாட்டு வடிவங்களிலும் அடைபட்டு அரூபமாய் திரிந்தலையும் கதைகளுள் ஒன்று.
தமிழ் நிலத்துக்கும் கொரிய தீபகற்பத்துக்குமான உறவைப் பறைசாற்றும் வலிமை இன்னும் அதற்குக் கைகூடவில்லை.
ஆனால், அதைச் சாத்தியப்படுத்தத் தேவையான நூலிழைகள் அத்தனையும் நம்மைச் சுற்றியே திரிகின்றன. அவற்றைச் சேகரித்து, சான்று நெய்யும் வேலையில் முதல் தறிக்கோலைக் கையிலெடுத்திருக்கிறேன்.
இது இப்படித்தான் நடந்ததென்ற தெளிவுமில்லை, இப்படி நடந்திருக்கலாமென்ற அனுமானமுமில்லை, இப்படி நடந்திருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே.
கற்பனையை விஞ்சும் இந்தக் கதையின் உண்மை வேரைத் தேட வாசகரைத் தூண்டுவதே எம்நோக்கம். திறந்த மனதோடு வாருங்கள்.
செம்பா – கடாரம் போலவே என்னை ஆழமாக இழுத்துக்கொண்ட இன்னொரு கதைச்சூழல் இது. தமிழ் மரபு அறக்கட்டளையின் வாயிலாகச் சிற்சில மரபுசார் பணிகளை மேற்கொண்டிருந்தவேளையில் அடிக்கடி பேச்சில் எழும்பிய கருதுகோள் இது.
கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிருந்து, இந்தத் தமிழ்நிலத்திலிருந்து ஒரு பெண் கடல்கடந்து சென்று ஒரு சாம்ராஜ்யத்தின் ராணியாக ஒரு பெரும் இனத்தின் தோற்றுவாயாக மாறியது வரலாற்று ஆய்வு வட்டத்தில் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத செய்தியாக இருந்தது. தமது மண்ணிலிருந்து அடிப்படை ஆய்வைச்செய்த கொரிய ஆய்வாளரும் முதலில் இந்த ஹியோங் ஹ்வாங் ஓக் (Heo Hwang Ok) என்கிற இந்த இராணி அயோத்தி இளவரசி என்றே கருதி முடித்துவிட்டார்.
அதன் பிறகு பேரா கண்ணன் அவர்கள் தான் இதை முற்றாக மறுத்து ஹியோங் ஹ்வாங் ஓக் நமது தக்கணத்து மண்ணிலிருந்து, குறிப்பாக ஆய் நாட்டிலிருந்து சென்ற செம்பவளம் (Chembavalam) என்ற கருதுகோளை முன்வைத்தார். தொடர்ந்து சர்ச்சைகளும் உரையாடல்களும் நிகழ்ந்தவண்ணம் இருந்தாலும் பேரா. கண்ணன் அவர்களின் கருத்துக்கு வலுசேர்க்கும் தரவுகளைத் தமஅ குழு தொடர்ந்து சேகரித்து வருகிறது. உரையாடல்களின் வழியே ஆய்வு தொடர்ந்த நேரம் என் மனத்துள் இந்தக் கரு ஆழமாக அமர்ந்துகொண்டது. ஏனெனில், பொதுவாகப் பெண்கள் சொல் பேச்சுக் கேட்கும் பழக்கமுள்ளவர்கள் அல்ல என்பது என் எண்ணம்.
முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காகவே முந்நீர் வழக்கம் மகடுஊக்கில்லை (பெண்கள் கடற்பயணம் மேற்கொள்ளக் கூடாது) என்கிற கருத்தை அன்றைக்கும் உதாசீனப்படுத்திச் சில பெண்களாயினும் கடலில் இறங்கிருக்கக்கூடுமென்றே எனக்குத் தோன்றும். அந்தக்கருத்துக்கு இந்தக்கரு மிக வலுவான ஆதாரமாக இருந்ததால் இதையே அடுத்த கதையாக எழுதுவதென முடிவெடுத்தேன்.
முடிவெடுத்ததும் பேரா கண்ணன் அவர்களும் நானும் மணிக்கணக்காக இதுகுறித்துப் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம். இருவரும் இணைந்து இதை எழுதுவதாக இருந்துப்பின் நான் மட்டும் எழுதுவதெனத் தீர்மானமானது. பேராசியர் ஆய்வு நோக்கிலும் நான் புனைவாகவும் எழுதத் தலைப்பட்டோம்.
அப்படி உருவானவள் தான் செம்பா. செம்பா விகடன்.காம் இணைய இதழில் தொடராக வெளிவந்தபோது கணிசமான வாசகரைச் சென்றடைந்தது. பின்னர் சுந்தர் கிருஷ்ணன் அவர்களின் முயற்சியால் வானதியில் வெளியீடானது. கடாரம் அளவுக்கு ஆய்வுக்குரிய தரவுகள் வெளிப்பட்டிராத நிலையில் சில இடங்களில் ஊகத்தின் அடிப்படையில் எழுதவேண்டியிருந்தது. ஆயினும் மங்கையொருத்தி என்னைபோலக் கடல்கடந்தாள் என்பதாலேயே எனக்கு இது மனதுக்கு உவப்பான கதை.
buy now
நூலைப் பெற
பிற வரலாற்று நூல்கள்
செம்பா உங்களுக்குப் பிடித்திருந்தால் இந்த நூல்களையும் உங்களுக்குப் பிடிக்கும்…



